கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு கரூர் மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு-அனைத்து கடைகளும் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடியது

கரூர் : கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 10ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய கடைகள் அனைத்தும் 12மணி வரை திறந்திருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காலை 10மணியுடன் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஊரடங்கின் ஆறாம் நாளான நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 10 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெற்றது. மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை இடைவெளி கடைபிடித்து வாங்கிச் சென்றனர். 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டதால் கரூர் நகரமே நேற்று மதியத்துக்கு மேல் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கரூர் மாவட்டம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்காமல் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலும், வாகனங்கள் சாலையில் செல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.

கரூர் மாவட்டம் முழுதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, முழுமையான ஊரடங்கை மக்கள் கடைபிடிக்கின்றனரா? என்பதை கண்காணிக்கும் வகையில் தெருப்பகுதிகளுக்கும் சென்று மக்கள் ஒன்று கூடாமல் அறிவுரை வழங்கி கலைந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார்களின் இந்த அறிவுரை காரணமாக பொதுமக்களும் வீடுகளிலேயே நேற்று முடங்கி இருந்தனர்.

அரவக்குறிச்சி: தளர்வில்லா முழு ஊரடங்கை முன்னிட்டு அரவக்குறிச்சி பகுதியில் பால், மருந்துக் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அரவக்குறிச்சி கடைவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வழக்கமான மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. அத்தியாவசிய பணி இல்லாமல் சென்ற லாரி உள்ளிட்ட வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

அரவக்குறிச்சியில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரவக்குறிச்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்ளிட்ட காவலர்கள் முக்கிய சந்திப்பு சாலைகளில் நின்று தேவையில்லாமல் டூ வீலரில் சுற்றுவர்களை எச்சரித்து அனுப்பினர்.

குளித்தலை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி குளித்தலை நகருக்குள் இருசக்கர வாகனத்தில் அவசியமின்றி வரும் மற்றும் அனாவசியமாக சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் அறிவுரை கூறி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

மேலும் நேற்று மதியம் இளைஞர்கள் தெருக்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் வாய்க்கால் ஓரத்தில் மறைவான இடத்திலும் ஒன்றுகூடி வருவதாக தகவல் அறிந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் காவலர்கள் குளித்தலை சுங்க கேட்டிலிருந்து ட்ரோன் கேமராவை இயக்கி சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு சென்று அவர்களை எச்சரிக்கை விடுத்து கலைந்து போகச் செய்தனர். இதனால் ஒரு சில இடங்களில் பதறிப்போன இளைஞர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

Related Stories: