எங்கள் மீது குடும்பத்தினருக்கு கவலை உங்கள் மீது எங்களுக்கு கவலை-போலீசாரின் உருக்கமான விழிப்புணர்வு வீடியோ

உடுமலை : கொரோனா பரவல் கட்டுப்படுத்த கணியூர் போலீசார் ,எங்கள் மீது குடும்பத்தினருக்கு கவலையும், உங்கள் மீது எங்களுக்கு கவலையாக உள்ளது, என்ற வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படத்தியுள்ளனர். உடுமலை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கணியூர் காவல்நிலையம் சார்பில், கொரோனா தடுப்பு பணியில் போலீசார் களின் பங்கு மற்றும் குடும்பத்தினரின் தவிப்பு குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் உருக்கமான விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு போலீசார்  ‘எனது தாய்க்கு உடல்நலமில்லை’ என்றும், பெண் போலீசார்  ‘எனது கணவர் என்னை நினைத்து கவலைப்படுகிறார்’ என்றும், மற்றொரு போலீசார்  ‘எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர்’ என்றும், இன்னொரு போலீசார் , ‘எனது மனைவி என்னை நினைத்து கவலைப்படுகிறார்’ என்றும் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்.

‘ஏனெனில் நாங்கள் உங்களைப் பற்றி கவலைப்படுகிறோம். எங்களால் வீட்டில் இருக்க முடியாது. எங்கள் குடும்பத்தை நீங்கள் விரும்பினால், வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என வேண்டுகோள் விடுக்கும் வகையில் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா காலத்தில் வீட்டில் இருக்க முடியாமல், வீதியில் பாதுகாப்பு பணியில் இருப்பதால், தங்கள் குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் இருப்பது குறித்த போலீசார் களின் இந்த வீடியோ பொதுமக்களை கவர்ந்துள்ளது.

Related Stories:

>