×

ஸ்பாட் ரஷ்...

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ‘ஸ்பாட் ரஷ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ள ‘எமர்ஜென்சி’ என்ற பட்டனை அழுத்தினால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் விரைவாக வந்து சேரும். சம்பந்தப்பட்ட நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு உடனடி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த செயலியை பல் மருத்துவர் எம்.குமரன், ஜெரோம் அந்தோணி தாஸ் மற்றும் குழுவினர் உருவாக்கியுள்ளனர். செயலியின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து செயலியை உருவாக்கிய குழுவினர் கூறியதாவது: ‘‘மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

இதுபோன்ற காரணத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த செயலியை உருவாக்கி உள்ளோம். இலவச சேவையை வழங்கவே இதனை அமைத்திருக்கிறோம். முதலில் ஸ்பாட் ரஷ் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். யாரும் உதவிக்கு இல்லாத நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் இதில் உள்ள எமர்ஜென்சி பட்டனை அழுத்தினால் போதும்.

பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து விடும். தரவிறக்கம் செய்யும்போது சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, செல்போன் எண், உறவினர்கள் விவரம், அவர்களது செல்போன் எண் போன்ற எல்லா விவரங்களையும் பதிவிட வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் ஆம்புலன்ஸ் யாருடைய உதவியும் இல்லாமல் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கும் தகவல் சென்றுவிடும். அது மட்டுமில்லை, சாலையில் விபத்து ஏற்பட்டால் ‘ஹெல்ப் அதர்ஸ்’ என்ற பட்டனை தேர்வு செய்து ஆம்புலன்சை வரவழைக்கலாம்.

அவசர சிகிச்சைக்காக சென்னை மாநகர பகுதி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள  குறிப்பிட்ட சில மருத்துவ
மனைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை வரும் காலங்களில் விரிவுபடுத்தப்படும்’’ என்றனர்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!