முழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் முடங்கியது-சாலைகள் வெறிச்சோடியது

திருப்பூர் : முழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் முடங்கியது. திருப்பூர் மாநகரப்பகுதியில் முழு ஊரடங்கான நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த  கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

 இந்த ஊரடங்கில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர அனைத்தும் அடைத்திருக்க வேண்டுமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தநிலையில் நேற்று ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்த முழு ஊரடங்கை கடைபிடிக்கும் விதமாகவும், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும்   நேற்று  திருப்பூரில் உள்ள முக்கிய 8 சாலைகளிலும் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல திருப்பூர் பெரியகடை வீதி, குள்ளிசெட்டியார் வீதி, காதர் பேட்டை, பூ மார்க்கெட் வீதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளும் நேற்று அடைக்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கயம்: காங்கயத்தில் நேற்று பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் கடைவீதிகள்  மற்றும் பஸ் நிலையம், தினசரி காய்கறி  மார்க்கெட்டுகள் போன்ற அனைத்து இடங்களிலும்  பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் அத்யாவசிய பொருட்களான மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர அணைத்து கடைகளும்  பூட்டிக்கிடந்தன. மேலும் காங்கேயம் நகர சாலைகளான திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை, பழையகோட்டை சாலைகளிலும்  வாகன போக்குவரத்து ஏதுமின்றி  அமைதியாக காணப்பட்டது.  

மேலும் காங்கயம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் காங்கயம் கடைவீதி பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போல் தாராபுரம், அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து இல்லாததால் முடங்கின. இதனால் அப்பகுதி சாலைகள் வெறிச்சோடின.

Related Stories: