கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி!: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். 

இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களை சேர்ந்தவர்கள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் தனது பங்களிப்பாக ரஜினிகாந்த் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிக்காக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழக அரசு கொண்டு வந்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை ஒழிக்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>