சென்னை ஓட்டேரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டேரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை ஓட்டேரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர். 

இதனையடுத்து அயனாவரம் பேருந்து நிலையம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், முன்கள பணியாளர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினார். முகக்கவசம், கிருமிநாசினி அடங்கிய தொகுப்புகளையும் முன்கள பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் குடிசைமாற்று பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா நிவாரண தொகையான 2000 ரூபாயை பயனாளிகளுக்கு வழங்கினார். 

இதையடுத்து தமது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்ற ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 மாற்று திறனாளிகளுக்கு அரசி, பருப்பு, மளிகை பொருட்கள், முகக்கவசம் மற்றும் ஊக்க தொகை அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து, சட்டமன்ற அலுவலகத்திற்கு அருகில் இருந்த வீடுகளுக்கு சென்ற முதலமைச்சர், அங்கிருந்த முதியவர்களிடம் நலம் விசாரித்தார். கொரோனா காலத்தில் பாதுகாப்புடன் இருக்கும்படியும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் தங்களிடம் நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

Related Stories: