எய்ம்ஸ் மருத்துவர்கள் அட்வைஸ் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும், கூடாததும்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும், குணமடைந்து விடலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இளம் வயதினர், மூச்சு திணறல் பாதிப்பு இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருந்தாலே கொரோனாவை வென்று விடலாம்.  தற்போது நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், கொரோனா அறிகுறி உள்ள பலரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என எய்ம்ஸ் டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். வெப்பினார் நிகழ்ச்சி ஒன்றில் எய்ம்ஸ் டாக்டர்கள் கூறிய அறிவுரைகள்:

* வீட்டு தனிமையில் இருப்பவர்கள் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

* வீட்டு தனிமையில் இருப்பவர்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பதும், தினசரி உடற்பயிற்சிகள் செய்வதும் நல்லது.

* உடலில் ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கு கீழே சென்றால், நோயாளியின் வயது, பிற இணை நோய்களை பொறுத்து அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கலாம்.

* பாதிக்கப்பட்ட 80 சதவீத நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. எனவே, ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும், கொரோனா அறிகுறிகள் இருந்தால், மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளலாம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே வீட்டில் மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும்.

* மருந்துகள் மட்டுமே போதுமானது என கருதக்கூடாது. அதை சரியான சமயத்தில், சரியான அளவு உட்கொண்டால் மட்டுமே பயன் தரும்.

* உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், கிட்னி பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசித்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்தல் பற்றி முடிவு செய்ய வேண்டும்.

* காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, சுவை, வாசனை அறிவதை இழத்தல், தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு, உடலில் அரிப்பு, கண்கள் சிவத்தல் போன்ற கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அல்லது டாக்டர்களிடம் செல்ல வேண்டும்.

* வீட்டு தனிமையில் இருப்பவர்கள் அன்றாடம் தேவையான பொருட்களை முன்கூட்டியே அறையில் வைத்திருக்க வேண்டும். குடும்பத்தினர், டாக்டர்கள், நண்பர்கள் போன் எண்ணையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

* வீட்டு தனிமையில் இருப்பவர்களிடமிருந்து குடும்பத்தினரும், குறிப்பாக குழந்தைகள் விலகி இருக்க வேண்டும்.

* தொற்று பாதித்த நோயாளிகள் மூன்று லேயர் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அதை மாற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

* நோயாளிக்கு உணவு, தண்ணீர் போன்றவற்றை தந்து கவனித்து கொள்பவர் கட்டாயம் என்-95 மாஸ்க் அணிந்தே பேச வேண்டும்.  

* பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். நகத்தில் நகப்பூச்சு போட்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். பரிசோதிக்கும் முன்பாக 5 விநாடிகள் அமைதியாக இருந்து விட்டு பின்னர் பல்ஸ் ஆக்சிமீட்டர் வைத்து சோதித்து பார்க்கவும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே ஐவர்மெக்டின், பாராசிட்டமல் போன்ற மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

* அரித்ரோமைசின், ரெவிடோக்ஸ் போன்ற மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது. வீட்டு தனிமையில் இருப்பவர்கள் டாக்டர் அறிவுரை இன்றி எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Related Stories:

>