7வது நாளாக இஸ்ரேல் தாக்குதல்; குடியிருப்பு கட்டிடம் தகர்ப்பு காசாவில் பலி 181 ஆக உயர்வு

காசா:  காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கட்டிடங்கள் தரைமட்டமாகின. பலி எண்ணிக்கை 181 ஆக அதிகரித்தது.காசா போர் முனையில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை காசாவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக்கள் இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் அமெரிக்க செய்தி நிறுவனம், அல் ஜசீரா தொலைக்காட்சிமற்றும் இதர செய்தி நிறுவனத்தின் அலுவலகங்கள் இயங்கி வந்த கட்டிடமும் குறிவைத்து தாக்கப்பட்டது. முன்னதாக அங்கிருக்கும் ஊழியர்களை வெளியேற்றும்படி ராணுவம் எச்சரித்துள்ளது. இதன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், காசா நகரங்கள் மீது இஸ்ரேல் 7வது நாளாக நேற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதுவரை 52 குழந்தைகள் உட்பட 181 பேர் பலியாகி உள்ளனர். முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தாக்குதலில் காசாவின் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரின் வீடு தகர்க்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் நடந்த மூன்றாவது முக்கிய தாக்குதல் இதுவாகும்” என்றார்.

Related Stories: