இந்தியாவில் கொரோனாவுக்கு 6.5 லட்சம் பேர் இறந்துள்ளனரா?: அமெரிக்க பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனாவுக்கு 6 லட்சத்து 54 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனம் கொரோனா வைரசால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.  கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த ஆண்டு 3ம் தேதி வரையில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 20 நாடுகளில் உயிரிழந்தவர்களின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் 4.3 லட்சம் அளவுக்கு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அதாவது, இந்த கணக்கெடுப்பின் போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த கொரோனா இறப்புகள் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். ஆனால் அந்த சமயத்தில் 6 லட்சத்து 54 ஆயிரத்து 395 பேர் இறந்திருப்பதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்கா 3.4 லட்சம் இறப்புக்களையும் , ரஷ்யா 5.93 லட்சம் இறப்புகளையும் கணக்கிடவில்லை அல்லது குறைத்து மதிப்பிட்டு இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.    

உலக அளவில் பதிவான மொத்த இறப்புக்களின் எண்ணிக்கையானது பதிவான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட கால கட்டத்தில் கொரோனா இறப்புக்கள் 69.3 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது பதிவான 34 லட்சம் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும்.

இந்த ஆய்வு இறப்பு சான்றிதழ், ஊடக செய்திகள், நீதிமன்ற தகவல்களை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா இறப்புக்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இந்தநிலையில் அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு முடிவும் மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளன.

Related Stories:

>