குமரியில் தொடர் மழையால் அணைகள் நிரம்பி வழிகிறது: வீடுகள் இடிந்ததால் பாதிப்பு

நாகர்கோவில்: தென் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் சின்னம் காரணமாக, குமரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் கடந்த 2 நாட்களில் 43 வீடுகள் இடிந்துள்ளன. மழையுடன் பலத்த சூறை காற்றும், கடல்  சீற்றமும் காணப்பட்டது. நேற்று முன்தினம் வீடு இடிந்து 2வயது குழந்தை உட்பட 2 பேர் இறந்தனர். நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மாலை வரை பல்வேறு இடங்களில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. குலசேகரம் அருகே  திருநந்திக்கரை, மூலைபாகம் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் வீடு இடிந்தது. இதில் தாயும், 3 மகள்களும் காயமின்றி தப்பினர். திருநந்திக்கரை அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் வீடு,  திருநந்திகரை பகுதியில் 2 வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.  நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பரதர் தெருவில் நேற்று காலை ஒரு வீடு இடிந்து விழுந்தது. வீட்டு முன் நின்ற பைக் சேதம் அடைந்தது. வடிவீஸ்வரம் சாஸ்தான் கோயில் தெருவில் புதர்கள் மண்டிய நிலையில் வீடு உள்ளது. இந்த வீட்டின்  ஒரு பக்க சுவர் நேற்று இடிந்து விழுந்தது.

நேற்று மாலை வரை மாவட்டம் முழுவதும் பகுதியாக 33 வீடுகளும், முழுமையாக 10 வீடுகளும் என 43 வீடுகள் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்தன. 15 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.  வெள்ளம் பெருக்கெடுப்பு: மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. கோதையாறு, பரளியாறு, வள்ளியாறு, தாமிரபரணி ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி அணைகளின் நீர் மட்டமும் மளமளவென உயர்ந்தது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 57.80 அடியில் இருந்து சுமார் 3 அடி உயர்ந்து 60.75 அடியை எட்டியது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் நேற்று மதியம் 2 மணி அளவில்  அணையின் நீர் மட்டம் 42.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 990 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக 590 கன அடி வெளியேற்றப்பட்டது. நேற்று மதியம் மழை இல்லை.

இருப்பினும் 24 மணி நேரமும்  அணை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 44 அடியை தாண்டும் பட்சத்தில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பழையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.  மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் அரவிந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பெய்த கன மழையால் பாபநாசம்,  சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் மேலும் 3 அடி உயர்ந்துள்ளது

Related Stories: