சில்லி பாயின்ட்...

* நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஜூன் 18-22) இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* குரோஷியாவில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரம் மானு பேக்கர், பயிற்சிக்கு இடையே தனது பி.ஏ பொலிடிகல் சயன்ஸ் 4வது செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் எழுத உள்ளார்.

*ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் மாலத்தீவுகளில் தங்கியுள்ள 38 ஆஸ்திரேலிய வீரர்கள், ஊழியர்கள் இன்று நாடு திரும்ப உள்ளனர்.

* முழங்கால் மூட்டு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வரும் வேகப் பந்துவீச்சாளர் டி.நடராஜன், ‘ஒவ்வொரு நாளும் முன்பை விட வலுவாக உணர்கிறேன். விரைவில் முழு உடல்தகுதியுடன் பந்துவீசத் தயாராகி விடுவேன்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தின்போது பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பந்துவீச்சாளர்களுக்கும் முன்கூட்டியே தகவல்  தெரியும் என்று பேங்க்ராப்ட் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து மீண்டும் விரிவான விசாரணை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

* இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தான் இப்போது உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் பாராட்டி உள்ளார்.

* இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணை விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கன்சாஸ் மாகாண பல்கலை. அணி சார்பில் களமிறங்கிய  இந்திய வீரர் தேஜஸ்வின் ஷங்கர், ஆண்கள் உயரம் தாண்டுதலில் (2.28 மீட்டர்) தங்கப் பதக்கம்  வென்று அசத்தியுள்ளார்.

*  இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே டெஸ்ட் தொடர் நடக்க உள்ள நிலையில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் முழங்கை காயத்தால் அவதிப்படுவது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை  கொடுத்துள்ளது.

Related Stories:

>