ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறேன்…: பி.வி.சிந்து உற்சாகம்

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முழுவீச்சில் தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 தொடர், இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூரில் நடைபெற இருந்த தகுதிச் சுற்று போட்டிகளை உலக  பேட்மின்டன் கூட்டமைப்பு ரத்து செய்துவிட்ட நிலையில், முன்னணி வீரர், வீராங்கனைகள் தனித்தனியே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பி.வி.சிந்து இது குறித்து கூறியதாவது: தகுதிச் சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. உலக அளவில் முன்னணி வீராங்கனைகளுடன் மோதும் வாய்ப்பு பறிபோனதில் சற்று வருத்தம் தான். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் வேறு வழியில்லை.  அதனால் வெவ்வேறு உள்ளூர் வீராங்கனைகளுடன் மோதி பயிற்சி பெற்று வருகிறேன்.

போட்டியின்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளை உருவாக்கி அதற்கேற்ப பயிற்சி செய்யும் முறையை எனது பயிற்சியாளர் பார்க் டே சாங் (கொரியா) வடிவமைத்துள்ளார். இது மிகவும் பலனளிப்பதாக உள்ளது. குறிப்பாக டாய் ட்ஸூ  யிங், ரட்சனோக் இன்டனான் போன்ற முன்னணி வீராங்கனைகளுடன் மோதுவதற்கு என்னை தயார் செய்து வருகிறார். அவரது ஆலோசனைகள் எனது தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. இவ்வாறு சிந்து கூறியுள்ளார். தெலங்கானாவின் கச்சிபோலி உள்ளரங்கு ஸ்டேடியம் மற்றும் சுசித்ரா அகடமியில் தற்போது சிந்து பயிற்சி பெற்று வருகிறார்.

Related Stories: