வீட்டில் தனியறை இல்லாததால் கட்டிலை மரத்தில் கட்டி கொரோனா நோயாளி தனிமை: தெலங்கானாவில் வீடியோ வைரல்

திருமலை: கொரோனா தொற்று லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் இடவசதி இல்லாததால் வீடுகளில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வசதியில்லாதவர்கள் வேறுவழியின்றி  மருத்துவமனை வளாகத்தில் தரையில் படுத்தபடியும் சிகிச்சை பெறும் நிலை பல இடங்களில் உள்ளது. இந்நிலையில், ெகாரோனா உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இல்லாத வாலிபர் ஒருவர், மரத்தில் கட்டிலை கட்டி  தனிமைப்படுத்திக்கொண்ட சம்பவம் தெலங்கானாவில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா(25). இவரது வீட்டில் பெற்றோர், சகோதரர் என மொத்தம் 4 பேர் வசிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாவுக்கு உடல்நலக்குறைவு  ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  ஆனால், மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததை அறிந்த அவர், அங்கு செல்லாமல் வீட்டிலேயே தன்னை  தனிமைப்படுத்திக்கொள்ள திட்டமிட்டார். ஆனால், அவர்களது வீட்டில் ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளது. எனவே வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் கட்டிலை கட்டி தங்கினார்.

கடந்த 2 நாட்களாக அவர் மரத்திலேயே  தனிமைப்படுத்திக்கொண்டார். அவருக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரைகள் அனைத்தும் கயிறு மூலம் அவரது குடும்பத்தினர் தருகின்றனர். இந்த காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலர் அவருக்கு உதவ முன்வந்தனர். ஆனால் அதனை சிவா மறுத்து நேற்று 3வது நாளாக மரத்தில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: