6 பேர் பலி, வீடுகள் தரை மட்டம், மின் கம்பங்கள் முறிந்தன: டவ்தே புயலால் கர்நாடகா, கோவாவில் கனமழை: மும்பைக்கு எச்சரிக்கை; குஜராத்தில் நாளை கரை கடக்கிறது

பனாஜி: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று குஜராத் நோக்கி நகர்கிறது. இதனால் கர்நாடகா, கோவாவில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதில் 6 பேர் பலியாகினர். பல வீடுகள், மின்கம்பங்கள் தரைமட்டமாகின. மும்பையில் இன்று கனமழை கொட்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளை காலை இப்புயல் குஜராத்தில் கரையை கடக்க உள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் காரணமாக கேரளா, தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்த நிலையில் நேற்று கர்நாடகா,  கோவா நோக்கி புயல் நகர்ந்தது. அம்மாநிலங்களில் டவ்தே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களான தென்கனரா, உடுப்பு, வடகர்நாடகா மற்றும் மலை நாடு மாவட்டங்களான குடகு, ஷிவமொக்கா,  சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

கடலோரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் கடலோரத்தையொட்டியப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுலா தளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  டவ்தே புயலால் ஏற்பட்ட மழையால் உடுப்பி, தென் கனரா,  வடகர்நாடகா, சிக்கமகளூரு, குடகு, ஷிவமொக்கா உள்பட 6 மாவட்டங்களிலும் சேர்ந்து 17 தாலுகாக்களில் உள்ள 73 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 4 பேர் இடி, மின்னல் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர். 112 வீடுகள் இடிந்து  தரைமட்டமாகியுள்ளது. 139 மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலை உருவானது.

இதே போல கோவாவிலும் நேற்று கனமழை பெய்தது. கடந்த 1994க்குப் பிறகு கோவாவை தாக்கும் மோசமான புயல் என அம்மாநில மீனவர்கள் தெரிவித்தனர். புயலால் பல மின்கம்பங்கள் சரிந்ததால், பல பகுதிகள் இருளில் மூழ்கின. அங்கு 2  பேர் உயிரிழந்தனர். இந்த புயல் இன்று மகாராஷ்டிராவை நோக்கி நகரும் என்பதால், கொங்கன், மும்பை, தானே மற்றும் பல்கர் பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று மாலை குஜராத் கடலோர பகுதியை அடையும் டவ்தே புயல் நாளை காலை போர்பந்தர் மற்றும் பாவ்நகரின் மஹூவா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது 175 கிமீ வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குஜராத்துக்கு மஞ்சள் எச்சிரக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், குஜராத்தில் புயல் பாதிப்புகளை சமாளிக்க தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய  பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர்.

அமித்ஷா ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காணொளி வாயிலாக மகாராஷ்டிரா, குஜராத் மாநில முதல்வர்கள் மற்றும் டாமன்-டையு, தாதர் நகர் ஹவேலி  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, புயல் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

580 கொரோனா நோயாளிகள் மாற்றம்

மும்பையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளை ஒட்டிய மருத்துவமனைகளில் இருந்து 580 கொரோனா நோயாளிகள் ஜம்போ சிகிச்சை மையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.  மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>