மேட்டூர் அணை திறப்பு எப்போது?: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தஞ்சை: மேட்டூர் அணை திறப்பு எப்போது என்பது குறித்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்ட செயலாக்கம் மற்றும் குறுவை சாகுபடி குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், தஞ்சை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன்  முன்னிலை வகித்தனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கரூர்,  அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இதுதொடர்பாக விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழக முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பாணை வெளியிடுவார். அதேபோல் தூர்வாரும் பணி தொடர்பாக நிதித்துறைக்கு உரிய திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அது  குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.

மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 500 கனஅடியாக இருந்த  நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 2,500 கனஅடியாக அதிகரித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 398 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,146 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் 97.67  அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை 97.74 அடியானது.  நீர் இருப்பு 61.95 டிஎம்சியாக உள்ளது.

Related Stories:

>