புதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு: கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று திரும்புகிறார்: தடாலடியாக முக்கிய முடிவுகளை எடுப்பாரா?

புதுச்சேரி: புதுச்சேரியில் தேஜ அணியில் குழப்பம் நீடிக்கும் பரபரப்பான அரசியல் சூழலில் சென்னையில் கொரோனா சிகிச்சை முடிந்து முதல்வர் ரங்கசாமி இன்று புதுச்சேரி திரும்புகிறார். புதுச்சேரியில் தேஜ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக கடந்த 7ம்தேதி  ரங்கசாமி பதவியேற்றார். அடுத்த சில நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது    உறுதியாகவே சென்னை தனியார் மருத்துவமனையில்  சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஒரு வாரமாக சிகிச்சையில் உள்ள ரங்கசாமி இன்று (17ம்தேதி) அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

 பின்னர் டாக்டர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒருவாரம் திலாஸ்பேட்டையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.  தனிமையில் இருந்தபடியே அரசு அதிகாரிகளுடன்      தொலைபேசி வாயிலாக ஆலோசித்து கொரோனா பரவல் தடுப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உத்தரவிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.மேலும் பாஜகவின் சில தன்னிச்சையான செயல்பாடுகளால் கூட்டணிக்குள் குழப்பம் நிலவி வரும் நிலையில், நியமன எம்எல்ஏக்கள் விவகாரம், புதிய அமைச்சரவை, இலாகாக்கள் ஒதுக்கீடு, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு, எம்எல்ஏக்கள்  பதவியேற்பு உள்ளிட்ட  பல்வேறு அம்சங்கள் குறித்து என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அவர் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், பாஜ செயல்பாடுகள் அதிருப்தியை அளிக்கிறது. தன்னிச்சையாக நியமன எம்எல்ஏக்கள் நியமனம், அடுத்ததாக தலைமை செயலரை தன்னிச்சையாக பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து  பேசியது கூட்டணிக்கு எதிரான முரண்பாடு ஆகும். கொரோனாவின் கோர பிடியில் புதுவை சிக்கி இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர பிரதமரிடம் சிறப்பு நிதி வாங்க வேண்டியது தானே. புதுவைக்கான ஜி.எஸ்டி வரி தொகை மத்திய அரசு  வழங்க பாஜக எம்எல்ஏக்கள் முயற்சி செய்யலாம். பின்னர் நிதி கமிஷனில் புதுவையையும் சேர்க்க வலியுறுத்தலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு நியமன எம்எல்ஏக்கள் உள்பட தன்னிச்சை செயல்பாடு எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது  என வேதனையுடன் கூறினார். கூட்டணிக்குள் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று என்ஆர் காங்கிரசில் சில எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில்,  அவர்களுடன் விவாதித்தபின் முக்கிய முடிவுகளை  முதல்வர் ரங்கசாமி தடாலடியாக எடுக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுவையில் கொரோனா புதிய உச்சம் 32 பேர் பலி

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 9,446 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 1,961 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், புதுவையில் 25 பேர், காரைக்காலில் 6 பேர், மாகேவில் ஒருவர் என இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 21 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள் ஆவர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,151.

 புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 84,506 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>