வந்தவாசி அருகே தந்தைக்கு உதவியாக நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி: கிராம மக்கள் பாராட்டு

வந்தவாசி: நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கி விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் 10ம் வகுப்பு மாணவிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு  4 மகள்கள். இதில் 3வது மகள் மீனா(15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா  காரணமாக பள்ளி திறக்கப்படாததால் கடந்த ஒரு வருடமாக மீனா, தனது பெற்றோருக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார். ஏர் ஓட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது என அனைத்து விவசாய பணிகளையும்  ஆண்களுக்கு இணையாக ஆர்வத்துடன் செய்து வருகிறார்.

தற்போது, அறுவடை காலம் என்பதால் மீனாவின் தந்தை ஓய்வு இல்லாமல் வேலை செய்து வருகிறார். இதனை உணர்ந்த மீனா தனது தந்தைக்கு உதவியாக நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கி, நெற்பயிரை தானே அறுவடை செய்துள்ளார். மேலும், கிராமத்தில் மற்றவர்களது விவசாய நிலத்தில் உள்ள நெற்பயிர்களையும் தந்தைக்கு உதவியாக சென்று, அறுவடை செய்து வருகிறார். ஆண்கள் மட்டுமே இயக்கும் நெல் அறுவடை இயந்திரத்தை மாணவி மீனா இயக்குவது அந்த  கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories:

>