புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனையில் அவலம்: நோயாளிகள் மத்தியில் சடலங்கள்

புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில், நோய்த்தொற்றால் இறந்தவர்களின்   உடல்களை வைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வெகுவேகமாக பரவி வருகிறது. தினமும் சுமார் இரண்டாயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர்.  இதனிடையே கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலானோர் இங்குதான் சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு மட்டும்  தினமும் சுமார் 10 பேர் இறக்கின்றனர். தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இறந்தவர்களின் சடலங்களை பிணவறையில் வைக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் நோயாளிகளுக்கு போதிய படுக்கை, ஆக்சிஜன் வசதி இல்லை  என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ நேரு கதிர்காமம் மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில், கொரோனா பாதித்து  உயிரிழந்தவர்களின் உடல்கள் அங்கேயே உறையால் கட்டி வைக்கப்பட்டிருந்தது. தங்கள் மத்தியில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்  என நோயாளிகள் நேரு எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். நோயாளிகள் மத்தியில், இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories:

>