மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியின்போது கிடைத்த மணலை முறைகேடாக விற்று அதிகாரிகள் ரூ.15 கோடி கொள்ளை: நடவடிக்கை கோரி முதல்வர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனு

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி கட்டுமானத்திற்காக தோண்டியபோது கிடைத்த மணலை, வெளிமார்க்கெட்டில் விற்று ரூ.15 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்கக்கோரி முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனருக்கு சமூக ஆர்வலர் புகார் மனு அனுப்பியுள்ளார். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் மாசி வீதிகள் உள்பட பல்வேறு பிரபலமான பகுதிகளில் திட்டப்பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில்  தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்பம் முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தன.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹100 கோடி திட்ட மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம், இரு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் என ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு  வருகிறது. இதற்காக பெரியார் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, அகலம் மற்றும் ஆழப்படுத்தும் பணிகளும் நடைபெற்றது. அதனடிப்படையில் இப்பகுதியில் சுமார் 10 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு, வாகனம் நிறுத்தும் இடத்துக்கான கட்டுமான  பணி நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் தோண்டும்போது கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய கிராவல் மணல் அதிகளவில் கிடைத்துள்ளது.

இந்த மணலை மாநகராட்சி தலைமை பொறியாளர் ஒருவரும் மற்றும் சில அதிகாரிகளும் இணைந்து, அரசுக்கும், கனிமவளத்துறையை சேர்ந்த யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்துள்ளனர். இதனால் அரசுக்கு சுமார் ₹15 கோடி அளவில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார், சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்தி கனிமவளக் கொள்ளையில்  ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல முறைகேடு மூலம் பெறப்பட்ட பணத்தை அதிகாரியிடமிருந்து பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: