நலிவடைந்த ஓட்டுநர்களுக்கு நிதிஉதவி வழங்க வேண்டும்: சுதந்திர வாகன ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ, தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஊரடங்கில், தமிழக வாடகை வாகன உரிமையாளர்களுக்கு அரசு தரப்பில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. கடந்த ஜனவரி முதல் ஆட்டோ, வாடகை கார் மற்றும் மேக்ஸி வேன் உரிமையாளர்கள் வட்டிக்கு கடன்  பெற்று வாகனத்தை புதுப்பித்தல், காப்பீடு எடுத்தல், பழுதுபார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது, கொரோனா 2ம் கட்ட பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கலங்கி உள்ளோம். எனவே அரசு, உடனடியாக நலிவடைந்த வாகன உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு வாடகை  வாகனத்திற்கான3ம் நபர் காப்பீடு திட்டம் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடனை கூட்டுறவு வங்கியின் வாயிலாக ஏற்று கால அவகாசத்துடன் திருப்பி செலுத்த வேண்டும். தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட  ஓட்டுனர்கள் உள்ள நிலையில், தமிழக தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஓட்டுனர் தொழிலாளர்களுக்கு மட்டுமே கடந்த முறை ரூ.2,000 நிவாரணமாக வழங்கப்பட்டது. எனவே, நலிவடைந்த டிரைவர்களுக்கு அவர்களது  வங்கிக்  கணக்கில் நிதிஉதவி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: