இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் உயிரிழப்பு; பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தகவல்

சென்னை: இந்தியாவில் போக்குவரத்திற்கு மிக முக்கிய உயிர்நாடியாக விளங்குவது ரயில்வே. பெரும்பாலான ரயில் வழித்தடங்கள் அடர் வனப்பகுதிகள் வழியாகவும் செல்கிறது. இதனால் அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரகாண்ட்  மாநிலங்களில் அதிக யானைகள் ரயில் விபத்தில் சிக்குகின்றன. ஆனால், தெற்கு ரயில்வேயை பொறுத்தவரையில் செங்கோட்டை - கொல்லம், கோவை- பாலக்காடு, சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் வழித்தடம் என  இந்த மூன்று ரயில் வழித்தடங்களும் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக செல்கின்றன.  இதில், கோவை- பாலக்காடு வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.  

இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்  துறையிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தார். அதற்கு யானைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரி டாக்டர் முத்தமிழ்செல்வன் அளித்த பதிலில், ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளது.

இதைத்தடுப்பதற்கு அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிதல், வனத்துறை ஊழியர்கள் தொடர் ரோந்து, ரயில்வே துறை வனத்துறை இணைந்து கமிட்டி அமைத்து தொடர் சந்திப்புகள் மற்றும் கடிதம் வாயிலாக யானைகள் பாதுகாப்பை  மேம்படுத்துதல், தண்டவாளத்திற்கு இருபுறமும் உள்ள செடிகொடிகளை வெட்டுதல், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைத்தல், மண்டல ரயில்வே அதிகாரிகள்  மாநில வனத்துறை அதிகாரிகள் மூலமாக  கமிட்டி அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய வனவிலங்கு வாரியம், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க, அகச்சிவப்பு கதிர் கேமரா, ஆப்டிகல் கேமரா மற்றும் ரேடார் உதவியுடன் கூடிய படங்கள் என இந்த மூன்றும், மூன்று  கண்களாக செயல்படும் ரயில் ஓட்டுனர்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்கும்.  ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது இந்தியா முழுவதும் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டு வனப்பகுதிகளான கோவை வாளையார், மற்றும் கர்நாடகா  செல்லும் வழிதடமான ஓசூர் பகுதிகளில் அடிக்கடி ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: