ஆன்லைனில் விளம்பரம் செய்து கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற 3 பேர் சிக்கினர்: 2 குப்பி மருந்து, ரூ.89 ஆயிரம் பறிமுதல்

வேளச்சேரி: கொரோனா நேயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை ஆன்லைனில் விளம்பரப்படுத்தி, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமுக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் அடையாறு மற்றும் சுற்றுவட்டார   பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று அடையார் வாட்டர் டேங்க் அருகே 3 பேர் சந்தேகத்துக்கு  இடமாக நின்றிருந்தனர்.  அவர்களை மடக்கிப்பிடித்து, தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு குப்பி  ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ரூ.89 ஆயிரம் ரொக்கம்,  2 செல்போன்கள் ஆகியவற்றை   பறிமுதல் செய்தனர்.   இதையடுத்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  அதில், கே.கே.  நகரை சேர்ந்த மருந்து  கடையில் விற்பனையாளராக வேலை செய்து வரும் ஆதித்தியன்(24), பாரிமுனை பகுதியில் மருந்துக்கடை நடத்தி வரும் படாளத்தை சேர்ந்த ராஜ்குமார்(29), ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருந்துக்கடையில்  விற்பனையாளராக வேலை  செய்து வரும் அயனாவரத்தை சேர்ந்த சையத் அம்ஜித்(38) ஆகியோர்  ஆன்லைனில் விளம்பரம் செய்து தங்களை தொடர்பு கொள்ளும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் 800 மதிப்புள்ள  ரெம்டெசிவிர்  மருந்தினை ரூ.25 ஆயிரத்திற்கு  அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விற்பனை செய்ததும்  தெரியவந்தது.  

Related Stories: