எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பில் கொரோனா மருத்துவ சிகிச்சை மையம்: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பில் சிறப்பு கொரோனா மருத்துவ சிகிச்சை மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டுநடவடிக்கைக்குழு, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அளித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது தமிழகத்தில் கோவிட் இரண்டாம் அலை நோய்த்தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களை  முண்களப்பணியார்களாக அறிவித்திட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் உடனடியாக தடுப்பூசி போட்டிட உரிய ஏற்பாடுகளை வட்ட, கோட்ட அளவில் போர்கால அடிப்படையில் செய்திட வேண்டும்.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தினந்தோறும் நோய்த்தொற்று அதிகரித்த வண்ணம் இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் மின்ஊழியர்களும், மின்ஊழியர் குடும்பங்களும் தடுமாறி  வருகின்றனர். இத்தகைய நெருக்கடியை தவிர்த்திட எண்ணூர் அனல் மின்நிலைய நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுமார் ரூ.46 லட்சம் செலவு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால், 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை  ஏற்படுத்த முடியும்.

இங்கு தனிமைப்படுத்திட வேண்டிய நோயாளிகளை அனுமதித்து மருத்துவம் பர்த்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதே போன்ற சூழல் நிலவி வரும் பிற மாவட்டங்களிலும் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுவரும்  மின்ஊழியர்களுக்கு கொரோனா அவசர சிகிச்சை மையங்களை உருவாக்கிட உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்திட வேண்டும். மேலும் மின்ஊழியர்கள் பாதுகாப்புடன் பணிக்கு சென்று வருவதை உறுதி செய்திடும் வகையில் அடையாள  அட்டை காட்டப்பட்டால் தடை ஏற்படுத்திடாமல் அனுப்பி வைத்திட காவல்துறையினருக்கு உரிய அறிவுரை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: