தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் கொரோனா தொற்று ஒழிப்பு பணிகள்...மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: கொரோனா தொற்று ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அப்போது தான் ஒழிக்க முடியும். மேலும் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று இந்து அறநிலைத்துறை அமைச்சர்  சேகர்பாபு கூறினார்.

ராயபுரம் மண்டலம் டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 104 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்  போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வட்டார துணை ஆணையர் ஆகாஷ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பதற்கு முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைக்கும், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி முயற்சியில் 104 படுக்கைகள் கொண்ட  13 அறைகளில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் இடம் தருவது மட்டுமின்றி அறைகளுக்கு உண்ட மருத்துவ செலவுகள், மருத்துவர்களின்  செலவுகளையும் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசி போடதவர்களின் பட்டியலை ஒவ்வொரு வட்டத்திற்கு முன்களப்பணியாளர்கள் 50 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் முதல்தவணை தடுப்பூசி போடதவர்களின் பட்டியலை வழங்கி விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மாநகராட்சி ஊழியர்களுடன், திமுக நிர்வாகிகள் இணைந்து தடுப்பூசி போடும் இடங்களை மக்களுக்கு எஸ்எம்எஸ் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்று ஒழிப்பு என்பது மக்கள்  இயக்கமாக மாற  வேண்டும். அப்போது தான் ஒழிக்க முடியும் என்றார்.

தகனம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது

ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில்  ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது, “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடைபெற்றது. மின் மயானங்கள் முறையாக  பராமரிக்கப்படவில்லை. உடலை எரிப்பதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முற்றிலுமாக தடுக்கப்படும். உடல் தகனம் செய்ய அரசு நிர்ணயம் செய்த தொகை மட்டும் வசூல் செய்ய வேண்டும்.

உடல்களை 8 மணி நேரத்துக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலையில் உடனடி ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் பிணவறை பாதுகாப்பு அறைக்கு வெளியே இருப்பதாக தகவல்கள் வந்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டோம்.

தற்போது அப்படி வெளியே வைக்கப்பட்டிருந்த உடல்கள் மாற்று ஏற்பாடாக குளிர்சாதான வசதியுடன் இருக்கின்ற அறையில் வைக்கப்பட்டுள்ளது. எந்த மருத்துவமனையிலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் 2  நாட்களுக்கு மேல் இருப்பதில்லை. கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை 6 மணி முதல் 8 மணி நேரத்துக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் இனி ஒரு நாளுக்கு மேல் பிணவறையில் தேங்காது என்றார்.  இந்த நிகழ்வுகளின்போது, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, மற்றும் வில்லிவாக்கம் எம்எல்ஏ வெற்றியழகன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: