முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக சென்னை முழுவதும் 3,028 வழக்குகள் பதிவு: 3,252 வாகனங்கள் பறிமுதல்...போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: முழு ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று முன்தினம் வெளியே சுற்றியதாக சென்னை முழுவதும் 3,028 வழக்குகள் பதிவு செய்து 3,252 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 10 தேதி முதல் வரும் 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் 318 இடங்களில் வாகன சோதனை நடத்தி பொதுமக்களை கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாநகரம் முழுவதும் போலீசார் நடத்திய  அதிரடி நடவடிக்கையில் அரசு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 3,028 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பைக், ஆட்டோ, கார் என மொத்தம் 3,252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 2,485 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக 4 லட்சத்து 97 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொருட்கள் வாங்கம் போது சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 278  வழக்குகள் பதிவு செய்து அபராதமாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சமின்றி வெளியே சுற்றி வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும்  போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: