தமிழ்நாடு மின்வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்

சென்னை: ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வகத்தினுடைய ஆணையராக இருந்த  ராஜேஷ் லக்கானியை தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக தமிழக அரசு நியமித்துள்ளது. ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வகத்தினுடைய ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தேர்தல் ஆணையம், வீட்டுவசதி  வாரியம், சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட பல்வேறு பணிகளில் பணியாற்றியுள்ளார். இவர் வீட்டு வசதி துறை செயலாளராக பணியாற்றியபோது வீட்டுவசதி துறையை கவனித்து வந்த ஓ.பன்னீர் செல்வத்தின் பல்வேறு முடிவுகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாசாலையில் வீட்டுவசதி துறை அலுவலகத்திற்கும் அதற்கு எதிரே உள்ள பெரியார் மாளிகைக்கும் பாலம் கட்ட முடிவெடுத்தபோது அதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

குடிசை மாற்று வாரியத்தில் விதிகளை மீறி சில ஒப்பந்தங்கள் கோருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி துறையின் நிலங்களை பல்வேறு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போலி ஆவணங்கள்  தயாரித்து அபகரிக்க முயன்றனர். அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோயம்பேட்டில் 3 ஏக்கர் நிலத்தை முன்னாள் தலைமை செயலாளர் மற்றும் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் அலுவலக  அதிகாரிகள், சேலத்தை சேர்ந்த ஒருவர் ஆகியோர் போலி ஆவண தயாரிப்பு கும்பலுக்கு ஆதரவாக இருந்து 3 ஏக்கர் நிலத்தை கைப்பற்ற முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவர்கள் அந்த நிலத்தை கைப்பற்றாத வகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால், வீட்டு வசதி துறையில் ராஜேஷ் லக்காணி இருந்தால் ஊழல் செய்ய முடியாது என்று பதட்டமான  அதிகாரிகள் மற்றும் அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவலக அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ராஜேஷ் லக்கானியை வீட்டுவசதி துறை செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றி உத்தரவிட்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்து உடைய ஒருவர் கூட வகிக்க தகுதி அற்ற வரலாற்று ஆய்வகத்துறையின் ஆணையர் பதவியை வேண்டும் என்றே முதன்மை செயலாளர் அந்தஸ்தில் இருந்த ராஜேஷ் லக்கானியை நியமித்து  அப்போதைய அதிமுக அரசு அவமானப்படுத்தியது. நேர்மையான அதிகாரியான ராஜேஷ் லக்கானிக்கு தற்போது தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு  அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் நேர்மையான அதிகாரிகள் பலருக்கும் அவருடைய திறமை, தகுதிக்கு ஏற்றவாறு பதவியை வழங்கி வருகிறார் என பல்வேறு அதிகாரிகள் முதல்வரை பாராட்டி வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: