கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்: ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என ஊடகத்தினருடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத்தினருடனான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும்  தமிழகத்திலுள்ள முன்னணி  தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  

கூட்டத்தில், கொரோனா  நோய்த் தொற்று நடவடிக்கையில், முன்களப் பணியாளர்களாக விளங்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.  இதையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்க உள்ளது. நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து விமானப் படை விமானங்கள் வாயிலாக திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட உள்ளது. சிங்கப்பூரிலிருந்து 1,900  காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை சரியாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.  எனவே, மக்களின் நன்மைக்காக மக்களின் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை, முயற்சிகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதோடு, மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட  வேண்டும்.

ஊடகவியலாளர்கள் அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.  அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை  தங்களது ஊடகங்கள் மூலம் வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும். மக்களின் நல்வாழ்வில்தான் நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரே குறிக்கோளோடு செயல்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொரோனா பெருந்தொற்றினை  முறியடிப்போம். இவ்வாறு பேசினார்.

Related Stories: