தகன மேடைகளில் பணிபுரிபவர்களுக்கு உதவி தொகை வழங்குவது குறித்து நடவடிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தகன மேடைகளில் பணிபுரிபவர்களுக்கும் உதவி தொகை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கோட்டூர்புரத்தில்  உள்ள அவுசிங்போர்டு   பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொரோனா நிவாரண உதவித்தொகையான ₹2000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தேவையற்ற வகையில் ரெம்டெசிவிர் மருந்துகளை எழுதி கொடுப்பதும் கூட்டம் கூடுவதும் அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும். தனியார் மருத்துவமனைகளில் எந்த நோக்கத்தோடு இந்த மருந்தை எழுதி தருகிறார்கள் என்பது புரியவில்லை.  மக்களை அலைகழிக்கும் நோக்கில் இது நடைபெறுகிறது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து தேவைக்கான காரணம் குறித்து ஆராய ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்படும். தற்போது 76 லட்சம் அளவுக்கு தடுப்பூசிகள் வந்துள்ளது. தடுப்பூசி போடும் பணியும்  67 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்க தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது.

தற்போது புதிதாக 12,500 படுக்கைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தேவைக்கு ஏற்ப படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நமக்கு தேவைப்படுகிறது. வல்லுநர் குழு மூலம் குறைந்த அளவில் ஆக்சிஜன் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.தனியார் மருத்துவமனைகளில் 100 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருப்பது போல தகன மேடைகளில் பணிபுரிபவர்களுக்கும் உதவி தொகை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: