தளர்வில்லா முழு ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வெறிச்சோடியது: வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல்

* மக்கள் நடமாட்டத்தை டிரோன் மூலம் கண்காணித்த போலீஸ்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எந்த தளர்வுகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், சாலைகள் அனைத்தும் வாகனங்கள் மற்றும் ஆட்கள் இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் சராசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  கடந்த 10ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் வரும் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கும் பிறப்பித்து உத்தரவிட்டார்.

 மேலும் ஊரடங்கு காலத்தில் ஞாயிற்று கிழமைகளில் எந்த  தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கை அமல் படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் நடைமுறைப்பட்டப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், வார சந்தைகள், மீன் மார்க்கெட் மற்றும் கோயம்பேடு சந்தைகள் என  அனைத்தும் மூடப்பட்டது.  டிஜிபி திரிபாதி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் ஆகியோர் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்தனர்.

  அதோடு இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளை இணைக்கும் சாலைகள் அனைத்து தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். முக்கிய மேம்பாலங்களும் தடுப்புகள் மூலம் மூடப்பட்டது.  குறிப்பாக முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட  பகுதிகளில் போலீசார் ஆட்கள் நடமாட்டத்தை டிரோன் மூலம் கண்காணித்தனர். போலீசாரின் தடையை மீறி வெளியே சுற்றிய நபர்கள் மீது வழக்கு  பதிவு செய்து அவர்கள் வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

முழு ஊரடங்கால் மாநிலம் முழுவதும் நேற்று சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடியே காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக வாகனங்களில் வந்த நபர்களிடம் ஒவ்வொரு மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்ட சோதனை  சாவடிகளில் தீவிர ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னையை பொருத் தவரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 10 ஆயிரம் போலீசார் நேற்று முழு ஊரடங்கு பணியில் ஈடுபட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையை இணைக்கும் சாலைகளில் வாகன சோதனை  சாவடிகளை போலீசார் அமைத்து தேவையின்றி சென்னைக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் போலீசார் ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட டிரோன் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர். சென்னையில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி பொதுமக்கள் பெரும் அளவில் கொரோனா தடுப்பு பணிக்கு  ஆதரவு அளிக்கும் வகையில் வெளியே வராமல் தங்களது வீடுகளிலேயே முடங்கினர்.  அண்ணாசாலை உட்பட அனைத்து சாலைகள், பெரிய மேம்பாலங்கள் என அனைத்தும் தடுப்புகள் அமைத்து போலீசார் மூடியிருந்தனர். அனைத்து  கடைகளும் மூடப்பட்டுள்ளதா என்று போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் சென்று கண்காணித்தனர். முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் ரோந்து வாகனங்களில் ஒலி பெருக்கி வைத்து பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பாக போலீசார்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: