தடுப்பூசி போட ஆதார் கட்டாயமில்லை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு...பொய் கணக்கு காட்டும் முயற்சியா என சந்தேகம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதார் அட்டை கட்டாயமில்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது. இது தடுப்பூசி போட்டவர்களின் கணக்கில் குளறுபடி செய்வதற்கான  முயற்சியா என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் கிளப்பி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் கடந்த ஜனவரி 15ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 18  வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. ஆனால், பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவுவதால், 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை பல மாநிலங்கள்  தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட போதிய அளவில் இருப்பு இல்லை. காஷ்மீரில் ஒரு தடுப்பூசி கூட இருப்பு இல்லாத நிலை உள்ளது. தலைநகர் டெல்லியில் கூட ஒரு நாளுக்கான தடுப்பூசி மட்டுமே இருப்பு இருப்பதாக  அம்மாநில அரசு கூறியுள்ளது. உற்பத்தி அதிகமில்லாத காரணத்தால் போதிய அளவு தடுப்பூசியை மத்திய அரசால் விநியோகிக்க முடியவில்லை. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வோரை அடையாளம் காண அவர்களின் ஆதார் எண் முக்கிய  ஆவணமாக கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆதார் எண் இல்லாத சிலருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் அதனால் ஆதார் கட்டாயம் இல்லை என்றும் யுஐடிஏஐ கூறி உள்ளது. அதன் அறிக்கையில், ‘ஒருவரிடம் ஆதார் கார்டு இல்லாவிட்டாலும், தடுப்பூசி, மருந்துகள் வழங்கவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கவும் மறுக்கக் கூடாது. அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணியாக ஆதாரை  தவறாகப் பயன்படுத்தக்கூடாது. ஆதார் சட்டம் பிரிவு 7-ன்படி, ஆதார் அட்டை ஏதாவது ஒரு காரணத்தால் கிடைக்கவில்லை என்பதற்காக சேவைகளை மறுக்கக் கூடாது, விலக்கவும் கூடாது’ என கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், யுஐடிஏஐயின் இந்த உத்தரவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆதார் எண் பெறப்படுவதால், தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் செய்ய  முடியாது. இதுவே ஆதார் எண் இல்லாத பட்சத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையில் பொய் கணக்கை காட்டுவது எளிதாகி விடும். எனவே, தடுப்பூசி தட்டுப்பாட்டை மறைக்கவும், அதிகப்படியான பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக  பொய் கணக்கு காட்டவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதா என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.

வெளிநாடு செல்வோருக்கு சிக்கல்

வெளிநாடு செல்வோர் அவர்கள் போகும் நாடுகளில் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் காட்ட வேண்டியது அவசியம். ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் டிஜிலாக்கர் மொபைல் ஆப் மூலமாக எளிதாக பதிவிறக்கம் செய்து சான்றிதழை காட்ட  முடியும். ஆதார் எண் பெறப்படாவிட்டால் டிஜிலாக்கரில் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது முடியாத காரியமாகிவிடும். எனவே ஆதார் கட்டாயமில்லை என்ற உத்தரவு வெளிநாடு செல்வோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர்  சமூக ஆர்வலர்கள்.

95 சதவீதம் பேரிடம் ஆதார் எண் இருக்கே

நாடு முழுவதும் 95 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்கையில் தடுப்பூசி போட ஆதார் எண் கட்டாயமில்லை என கூறுவதும் சந்தேகங்களை வலுக்கச் செய்துள்ளது.  அதுமட்டுமின்றி தடுப்பூசி போட மக்களே ஆர்வம் காட்டுகின்றனர். பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், மக்களே ஆதார் எண்களை தர தயாராக இருக்கையில் மத்திய  அரசு ஆதார் கட்டாயமில்லை என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

Related Stories: