பாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’..! மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா அமைச்சர் மீது பாடகி ஒருவர் அளித்த பாலியல் புகார் விவகாரம் ஓய்ந்த நிலையில், அமைச்சரின் முன்னாள் காதலி தான் ஒரு ஆச்சரியமான காதல் கதை புத்தகம் எழுதுவதாக அறிவித்துள்ளார். மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மருமகன் தனஞ்சய் முண்டே, தற்போது மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் சமூக நீதிதுறை அமைச்சராக உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மீது பாடகி ஒருவர் மும்பை போலீசில் கடந்த ஜனவரியில் பாலியல் புகார் அளித்தார். அதாவது, சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே கடந்த 2006ம் ஆண்டு முதல் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் அறிமுகம் இருப்பதாகக் கூறி பாலிவுட்டில் வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதியளித்த அவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாடகியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அமைச்சர் தனஞ்சய் முண்டே, தனது பேஸ்புக்கில் விளக்கம் அளித்தார். அதில், ‘கடந்த 2003ம் ஆண்டு முதல் எனது திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, ஒரு பெண்ணுடன் (புகார் அளித்த பாடகியின் சகோதரி) வாழ்ந்து வந்தேன். அது எனது குடும்பம், மனைவி மற்றும் நண்பர்களுக்குத் தெரியும். அந்தப் பெண்ணுக்கும், எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய பள்ளி உட்பட எல்லா ஆவணங்களிலும் பெற்றோராக எனது பெயரைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இருவரும் எனது குடும்பத்தின் ஓர் அங்கம். அந்தப் பெண்ணையும், அவருடைய சகோதரரையும் எனது தொழிலில் உதவியாக வைத்திருப்பதன் மூலம் அவர்களை நன்கு கவனித்து வந்தேன்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் அந்தப் பெண், அவருடைய சகோதரர், சகோதரி (காதலி) ஆகியோர் என்னை ‘பிளாக்மெயில்’ செய்து மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே போலீசில் புகார் அளித்திருக்கிறேன். அந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தற்போது பாடகி அளித்த புகார், என்னை அச்சுறுத்துவதோடு, நீதிமன்ற வழக்கை அவரின் சகோதரிக்கு ஆதரவாகத் தீர்ப்பதற்குக் கொடுக்கும் அழுத்தம். எனது புகழுக்குக் களங்கம் விளைவிக்கவும், அவதூறு செய்வதற்கும், என்னை அச்சுறுத்துவதற்குகான முயற்சி நடக்கிறது’ என்று விளக்கம் அளித்தார். முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

சில வாரங்களுக்கு பின்னர், அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பாடகி திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றார். அதனால், இவ்விவகாரம் தற்காலிகமாக ஓய்ந்தது. இந்நிலையில், அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கு தற்போது புதிய தொல்லைகள் கிளம்பி உள்ளன.

அதாவது, பெண் ஒருவருடன் (காதலி கருணா) வாழ்ந்ததாக அமைச்சர் கூறினார் அல்லவா, அந்த பெண்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளார். அவர், தனது பேஸ்புக் பதிவில், புதியதாக புத்தகம் ஒன்றை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘எனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சத்ய பிரேம் ஜீவன் சாகா’ என்ற புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளேன். ஒரு ஆச்சரியமான காதல் கதை விரைவில் வரும்’ என்று புத்தகத்தின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசியல் அமைச்சர் மீதான பாலியல் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், மீண்டும் அவரது முன்னாள் காதலி கருணா, தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதனால், இந்த காதல் லீலைகள் தொடர்பான புத்தகம் வெளிவந்த பிறகு, மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>