நாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது

மீனம்பாக்கம்: நாக்பூரில் இருந்து நேற்றிரவு விமானப்படை விமானத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் 20 கருவிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இங்கிருந்து காலி சிலிண்டர்களுடன் 2 லாரிகள் புவனேஸ்வருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை பரவி வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கென வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் தமிழகத்துக்கு விமானத்தில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கருவிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து நேற்றிரவு இந்திய விமானப்படை விமானத்தில் 20 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. அக்கருவிகளை தமிழக சுகாதார துறை அதிகாரிகளிடம் விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதேபோல், திரவ ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக 2 டேங்கர் லாரிகள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இந்திய விமான படை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: