தொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது?

அண்ணாநகர்: சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று கோயம்பேடு மார்க்கெட். இது, 295 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகமாகும். இங்கு காய்கறி, கனி, மலர் அங்காடி என தனித்தனியாக இயங்கி வருகிறது. இதற்கு முன்பு இந்த மார்க்கெட், சென்னை பாரிமுனை அருகே உள்ள கொத்தவால்சாவடியில் அமைந்திருந்தது. கடும் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். அதனால் புதிதாக மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சென்னை கோயம்பேட்டில் 1982ம் ஆண்டு புதிய மார்க்கெட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி தொடங்கியது. பின்னர், 1996ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இது ஆசியாவின் மிக பெரிய சந்தையாக காணப்பட்டது. இங்குள்ள பூ மார்க்கெட்டில் 470 கடைகளும், பழ மார்க்கெட்டில் 820 கடைகளும், காய்கறி மார்க்கெட்டில் 1,800 கடைகளும் உள்ளது. தினமும் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் நாளொன்றுக்கு 500 லாரிகளில் காய்கறிகள் வரத்து உள்ளது.

அவைகளை இறக்கும் பணிக்கென சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் என 4 ஆயிரம் பேர் உள்ளனர். 27 வியாபாரிகள் சங்கங்கள் உள்ளது. தினமும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சுமார் 10 ஆயிரம் இருசக்கர வாகனங்களும், 4 ஆயிரம் சிறிய ரக சரக்கு வாகனங்களும் வந்து செல்கின்றன. பூ மார்க்கெட்டுக்கு ஓசூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் லாரிகள் மூலம் மலர்கள் வந்து சேருகிறது. மேலும் திருவள்ளூர் அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் இருந்தும் மினி வேன் உள்ளிட்ட 12 வாகனங்கள் மூலம் மல்லி பூக்கள் வரத்து உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் எப்போதும் களைகட்டி காணப்படும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பழங்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக காய்கறி வரத்து உள்ளது. உருளைக்கிழங்கு, பூண்டு உள்ளிட்டவை குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய பகுதியில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் பலரும் இங்கு வந்துதான் மொத்தமாக காய்கறிகள் வாங்கி செல்வார்கள்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு சுப நிகழ்ச்சியானாலும், துக்க நிகழ்ச்சியானாலும் இங்குதான் மொத்தமாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் என மொத்தமாக பொதுமக்கள் வாங்கி செல்வார்கள். சனி, ஞாயிற்றுகிழமையில் பொதுமக்கள் வரத்து அதிகம் இருக்கும். அதனால் சில்லரை வியாபாரமும் ஜரூராக நடக்கும். தினமும் பல நூறு டன் அளவுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாகும். கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும். இந்நிலையில் கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அந்த மார்க்கெட், கடந்தாண்டு மே 11ம் தேதி, தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் அங்கு செல்ல முடியாமல் தவித்தனர். அதே நேரத்தில் பூ மற்றும் பழ மார்க்கெட் மாதவரத்தில் இயங்கி வந்தது. கோயம்பேட்டில் மீண்டும் மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

அதே நேரத்தில் தொற்றின் வேகம் குறைந்து ஓரளவு சரியானது. இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் 28ம் தேதி மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் செயல்பட ஆரம்பித்தது. அதற்கு பிறகு வழக்கம் ேபால மீண்டும் வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள், பொதுமக்கள் சகஜமாக வர ஆரம்பித்தனர். இந்நிலையில், கொரோனா தொற்றின் 2வது அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்த முறை பாதிப்பு அதிகளவில் உள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, புதிய கட்டுப்பாடு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதில், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வியாபாரிகள், தங்களது வியாபாரத்தை முடித்து விடுகின்றனர். தொற்று பரவலுக்கு வழிவகுக்காமல் வியாபாரம் நடக்கிறது. விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், ‘முதல் தொற்று பரவலை தொடர்ந்து சுமார் 8 மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டோம். இன்னும் சொல்ல போனால் சாப்பாட்டுக்குகூட சிரமப்பட்ேடாம். சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டோம். அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்தோம். தற்போது, 2வது அலை பரவ தொடங்கியுள்ளது. அதிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வியாபாரம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நேரமாவது வழங்கப்பட்டிருக்கிறதே என்பது மகிழ்ச்சிதான். இந்த நேரத்தை கொஞ்சம் நீடித்தால் நன்றாக இருக்கும்’ என்றனர். இது தொடர்பாக காய்கறி சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘தொற்றின் முதல் அலையின்போது, 8 மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.

இதனால், வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்தனர். கடன் வாங்கி குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மார்க்கெட்டை திறக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. முன்பு இருந்த அரசு எங்களது குறைகளை கேட்கவில்லை. புதியதாக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின், எங்களது கோரிக்கையை ஏற்று முழு ஊரடங்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வியாபாரம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இதை கொஞ்சம் அதிகரித்தால் நல்லது. இருப்பினும் இந்த நேரத்திலாவது வியாபாரம் செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்பது மகிழ்ச்சிதான். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’ என்றார். இந்த தொற்றின் 2வது அலை படிப்படியாக குறைந்து விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும். மீண்டும் மார்க்கெட்டில் வியாபாரம் ஜரூராக நடக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். விரைவில் சகஜ நிலைக்கு திரும்பலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Related Stories:

>