டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை..!!

டெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு டெல்லியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வைரஸ் பரவலின் பாசிடிவ் விகிதம் தொடர்ந்து உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தன. இந்த ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், இந்த ஆரோக்கியமான சூழலை இழக்க விரும்பவில்லை. 

நிலைமையை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறோம். அதன்படி நாளை முதல் மே 24ம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதை தவறவிட்டால் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துவிடும். அப்படியொரு நிலைக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என தெரிவித்தார். முழு ஊரடங்கின் பலனாக, டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 35 சதவீதத்திலிருந்து தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாகவும்  கெஜ்ரிவால் குறிப்பிட்டார். 

ஊரடங்கு காலத்தில் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நேற்று 5430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தினசரி தொற்று குறைந்தாலும், உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் 337 பேர் உயிரிழந்தனர். 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 

Related Stories:

>