அரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த டவ் தே புயல் தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும்  வரும் 18ம் தேதி நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும். வரும் 19ம் தேதி நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும்.

Related Stories: