தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இவர் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு ஆகியவற்றில் அவர் தீவிரம்காட்டியிருந்தார். கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களையும் சேர்த்திருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 100 சதவீத வாக்குப்பதிவு என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் கன்னியாகுமரி. தேனி மாவட்டங்களின் ஆட்சியராகவும் இருந்திருக்கிறார். பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

இதுதொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆளுநரின் ஆணைப்படி வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: