முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவி ஏற்றார். அன்றைய தினம் அவர், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, தேர்தல் அறிக்கையில் அறிவித்த முக்கியமான ஒன்றான ஆவின் பால் விலை குறைப்பு. ஆட்சியில் அமர்ந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது வரும் 16ம் தேதி(இன்று) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதன்படி இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. புதிய விலை பட்டியலின்படி சமன்படுத்தப்பட்ட பால் 1000 எம்டி (டிஎம்) ரூ.43 லிருந்து ரூ.40, 500 எம்டி (டிஎம்) ரூ.21.50லிருந்து ரூ.20, நிலைப்படுத்தப்பட்ட பால் 500 எம்எல் (எஸ்எம்) ரூ.23.50லிருந்து ரூ.22, நிறை கொழுப்பு பால் 500எம்எல் (எப்சிஎம்) ரூ.25.50லிருந்து ரூ.24 ஆக, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 500 எம்எல் (டிடிஎம்) ரூ.20 லிருந்து ரூ.18.50, டீமேட் 1000 எம்எல் ரூ.60லிருந்து ரூ.57 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பால் அட்டை விலை குறைப்பு பட்டியலின்படி சமன்படுத்தப்பட்ட பால் 1000 எம்எல் (டிஎம்) ரூ.40லிருந்து ரூ.37, சமன்படுத்தப்பட்ட பால் 500எம்எல் (டிஎம்) ரூ.20லிருந்து ரூ.18.50, நிலைப்படுத்தப்பட்ட பால் 500எம்எல் (எஸ்எம்) ரூ.22.50லிருந்து ரூ.21, நிறை கொழுப்பு பால் 500எம்எல் (எப்சிஎம்) ரூ.24.50லிருந்து ரூ.23, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 500 (டிடிஎம்) ₹19.50லிருந்து ₹18 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை பட்டியல்படி பணத்தை கொடுத்து இன்று காலையில் பொது மக்கள் கடைகள் மற்றும் பூத்களில் பால் பாக்கெட்டுகளை வாங்கிச்சென்றனர். அதேபோல் வீடுகளுக்கு பால் பாக்கெட் சப்ளை செய்யும் முகவர்களும் குறைக்கப்பட்ட விலைக்கே பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தனர். பால் விலை குறைப்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கவிதா கூறுகையில், ‘‘ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைப்போம் என்று தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். சொன்னபடி அதை செய்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவர் டூவீலர் மெக்கானிக். தற்போது ஊரடங்கால் வேலையின்றி வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் பால் விலை குறைப்பு உபயோகமாக உள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது’’ என்றார். ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இன்று முதல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 விலை குறைத்துள்ளது. எனவே தரமான ஆவின் பாலை குறைந்த விலையில் பெற்று பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் புதிய முகவர் நியமனம், சிறப்பு தேவைப்பால் மற்றும் பால் உபபொருட்கள் தேவைக்கு தொலைபேசி எண்கள் 04362 255379 / 256588, 9443709636, 8807983824, 9443914498 தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளது.

Related Stories:

>