மோதல் உச்சகட்டம்!: பாலஸ்தீனத்தில் உள்ள மேலும் ஒரு 13 மாடி கட்டிடத்தை ராக்கெட் வீசி தகர்த்த இஸ்ரேல்..!!

காசா: பாலஸ்தீனத்தில் உள்ள மேலும் ஒரு 13 மாடி கட்டிடத்தை இஸ்ரேல் ராக்கெட் வீசி தகர்த்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கி வந்தன. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. ஏவுகணைகளை கொண்டு பாலஸ்தீனத்தில் உள்ள பல கட்டிடங்களை இஸ்ரேல் தகர்த்து வருகிறது. கடந்த 1 வாரத்தில் மட்டும் 4 கட்டிடங்கள் தகர்த்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காசாவில் அமைந்திருக்கும் 13 மாடி கட்டிடத்தை இஸ்ரேல் படையினர் குறிவைத்து தாக்கியுள்ளனர். இந்த கட்டிடத்தில் சர்வதேச ஊடகங்களான அல் ஜோசிரா, அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. 

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 145 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களில் 41 குழந்தைகளும், 23 பெண்களும் உயிரிழந்திருக்கிறார்கள். இதனிடையே காசாவில் செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் தகர்த்தப்பட்டதாக வெளியான தகவலை இஸ்ரேல் மறுத்துவிட்டது. நேற்றைய தினம் தகர்க்கப்பட்ட 13 மாடி கட்டிடம் ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தி வந்தது என்றும் உறுதியான தகவலை அடுத்தே கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. 

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நிதின் யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதி திரும்ப வேண்டும் என்றும் அதேபோன்று செய்தியாளர்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோன்று பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடனும் ஜோ பைடன் பேசியுள்ளார். இரு நாடுகளின் அமைதிக்கு உதவுவதாகவும் ஜோ பைடன் உறுதி அளித்திருக்கிறார்.

Related Stories: