கோவாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 8 பேர் உயிரிழப்பு!: மொத்த பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு..!!

கோவா: கோவாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 8 பேர் பலியாகிவிட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. பனாஜி-யில் உள்ள கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணிக்குள் மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தடைபடுவதால் அவரச சிகிச்சை பிரிவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

கடந்த 11ம் தேதி 26 பேரும், 12ம் தேதி 21, 13ம் தேதி 15 பேர், 14ம் தேதி 13 பேர் உட்பட 75 பேர் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.  இந்த நிலையில் 5வது நாளாக நேற்றும் 8 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அங்கு உயிரிழந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆக்சிஜன் சப்ளையால் நோயாளிகள் உயிரிழந்தனர் என்ற தகவலை கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே மறுத்திருக்கிறார். ஆக்சிஜன் சப்ளைக்கும் உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 

கோவா மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று முதல் முறையாக 26 பேர் உயிரிழந்த போது அதுபற்றி விளக்கம் அளித்த அமைச்சர் விஸ்வஜித், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தான் பலர் உயிரிழந்தனர் எனறு கூறியிருந்தார். கோவாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து ஆக்சிஜன், மருந்து பற்றாக்குறை பூதாகரமாகி இருக்கும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் நிகழவில்லை என்று அமைச்சர் மறுத்திருக்கிறார். 

Related Stories: