கொச்சியில் இருந்து தமிழக மீனவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது: 6 பேர் கதி என்ன?

திருவனந்தபுரம்: கொச்சியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு லட்சத்தீவு அருகே கடலில் கவிழ்ந்தது. இதில் 6 பேர் கடலில் மூழ்கினர். அவர்களை மீட்பதற்காக கடலோர காவல் படை கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. டவ்டே புயல் காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நாகப்பட்டினத்தை சேர்ந்த மணிவேல் என்பவரின் ஆண்டவன் துணை என்ற படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களுடன் மேலும் 2 படகுகளும் கடலுக்கு சென்றன. நேற்று லட்சத்தீவு அருகே கடலில் வீசிய பலத்த காற்றில் இந்த 3 படகுகளும் சிக்கின. இதில் 2 படகுகள் பத்திரமாக லட்சத்தீவு பக்கம் கரை ஒதுங்கியது.

ஆனால் ஆண்டவன் துணை படகு கடலில் கவிழ்ந்தது. அருகில் படகில் இருந்தவர்கள் 3 பேரை காப்பாற்றினர். மற்றவர்களை காப்பாற்ற முடிய வில்லை. இதுகுறித்து அந்தப் படகில் இருந்தவர்கள் சாட்டிலைட் போன் மூலம் கொச்சிக்கு தகவல் தெரிவித்தனர். கொச்சி கடலோர பாதுகாப்பு படையினர் கப்பலில் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 மீனவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

Related Stories:

>