கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது இன்று முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டாலும் ரேஷன் கடைகளில் 2,000 வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இன்று முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டாலும், ரேஷன் கடைகளில் 2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவியேற்றார். இதையடுத்து அன்று மதியமே, 2,07,66,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி செலவில் 2,000 வீதம் கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படும் என்ற கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதையடுத்து, கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை கடந்த 10ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில், 7 அரிசி குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கு 2000 நிவாரண தொகையை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.

அந்த டோக்கனில், எந்த தேதியில், எத்தனை மணிக்கு ரேஷன் கடைக்கு வந்து கொரோனா நிவாரண தொகையான 2 ஆயிரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று (15ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. தினசரி 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ரேஷன் கடைகளில் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண ெதாகை வருகிற 22ம் தேதி வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் முழு ஊரடங்கு என்பதால் கொரோனா நிவாரண நிதி வாங்க முடியுமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரால், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கொரோனா நிவாரண உதவியாக 2000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கொரோனா நிவாரண உதவித்தொகை 2000 நேற்று (15ம் தேதி) முதல் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கிட குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.  இந்த நேரத்தில், தமிழகத்தில் மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக முதல்வரால், இன்று மற்றும் வருகிற 23ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏற்கனவே 16.05.2021 அன்றும் முதல் தவணை கொரோனா நிவாரண தொகை 2000 வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி 16.05.2021 (இன்று) நிவாரண உதவி பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டும், கொரோனா நிவாரண தொகை 2000த்தினை இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். மேலும், ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கப்படும்பொழுது, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: