உடல்களை தகனம் செய்ய காத்திருப்பதை தவிர்க்க மின்மயானங்களில் விரைவில் ஆன்லைன் பதிவு முறை: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை:  சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில்  அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி ஆலோசனை கட்டுப்பாட்டு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நபர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் தொலைபேசியில் அழைத்து ஆலோசனைகள் வழங்கி மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு  ஆய்வு செய்தார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு எம்எல்ஏ டாக்டர் எழிலன், இணை ஆணையர் தர், துணை ஆணையர்  ஆல்பி ஜான் வர்கீஸ், கள ஒருங்கிணைப்பாளர் அலுவலர் தீபக் ஜேக்கப்  ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை கண்காணிக்கும் வகையில் 300 மருத்துவர்கள் சென்னை மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது.  அவர்கள் வீட்டு சிகிச்சையில் உள்ளவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்கள்.  அப்போது அவர்கள் உடலின் வெப்பநிலை சரியாக உள்ளதா? காய்ச்சல் உள்ளதா? ஆக்சிஜன்  அளவு எவ்வளவு உள்ளது என்று மருத்துவர்களிடம் கூற வேண்டும். அதன்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். சென்னையில் 140க்கும் மேல் மின்மயானங்கள் உள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  இதில் காலையில் குறைவான எண்ணிக்கையில் தான் இறந்தவர்களின் உடல்கள் வருகிறது. மாலையில் அதிகமாக வருகிறது. மாலை 6 மணி வரை தான் வேலை நேரம். ஆனால் இரவு வரை  தகனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும் 24 மணி நேரம் மின்மயானத்தில் தகனம் செய்யக் கூடாது. அதை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் இயந்திரத்தில் பழுது ஏற்படும்.  

சென்னையில் உள்ள மின்மயானத்தில் எங்கு காலியாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பணியில் ஐடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில்  இது நடைமுறைக்கு வரும். வர்த்தக மையத்தில் 69 பேர் ஆக்சிஜன் படுக்கைகளில் உள்ளனர். நேரடியாக நோயாளிகளை அனுமதிக்கப்படுவதில்லை.  ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படுகிறவர்கள் அங்கு இருக்கின்றனர். தண்டையார் பேட்டையில் 30 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் உள்ளனர். ஈஞ்சம்பாக்கத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளது. இரண்டு, மூன்று நாட்களில் திறக்கப்படும். ஆக்சிஜன் செறிவூட்டிகள் வரும் போது உடனடியாக சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: