கூட்டுறவு சங்கத்தை ஆய்வு செய்யாததால் அதிகாரியின் ஊதிய உயர்வு நிறுத்திவைத்த தண்டனை ரத்து

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறையில் பொது வினியோக திட்டப் பிரிவில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் வசந்தி. இவர், 2015- 17ம் ஆண்டுகளில் மதுரையில் களப் பணியாளராக பணியாற்றிய போது, குலமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு நடத்தவில்லை எனக் கூறி அவரது ஊதிய உயர்வை நிறுத்தி துணை பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.  இதை எதிர்த்து வசந்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்,  சில கூட்டுறவு சங்கங்களை அவருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கியதால் குலமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்ய முடியவில்லை. பதவி உயர்வு நெருங்கிய நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, கடமையைச் செய்யத் தவறியதால் தான் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று வாதிட்டார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பதவி உயர்வு பெறும் நேரத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனையில் உள்நோக்கம் இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. மனுதாரரால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஊதிய உயர்வை நிறுத்தி வைத்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலில் சேர்த்து பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: