கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் தர வேண்டும்: பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கோரிக்கை

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் தமிழகத்தில் ஏராளமான மக்களை பாதித்துள்ளது. தினமும் 32.000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவல் மற்றும் தொற்றை தடுப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் இணைந்த படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். எனவே, இந்த சூழலை கருத்தில்கொண்டு தமிழகத்திற்கு ஆக்சிஜனை கூடுதலாக மத்திய அரசு வழங்க வேண்டும். ரெம்டெசிவர் மருந்து சப்ளையை அதிகரித்து தரவேண்டும். தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: