கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளியின் நிலை குறித்து குடும்பத்தினர் நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும்: சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

சென்னை: ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியின் நிலை குறித்து அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு தகவல்களை அங்குள்ள உதவி மையத்தின் மூலமாக வழங்க வேண்டும்’ என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், இன்ஸ்டியூசன், கோவிட் ஹெல்த் சென்டர்ஸ் ஆகியவற்றில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கொரோனா பாதித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது பார்வையாளர்கள் அவசியமானவர்கள் என்றால், துறைத் தலைவர்/ சுகாதார அதிகாரிகளின் அறிவுத்தலின்படி அனைத்து விதமான கொரோனா தடுப்பு நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும். இருப்பினும் நோயாளியின் நிலை குறித்து குடும்பத்தினர், நண்பர்களுக்கு தகவல்களை அங்குள்ள உதவி மையத்தின் மூலமாக வழங்க வேண்டும். ஆகவே உங்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இடங்களில் மேற்கூறிய வழிமுறைகள் துல்லியமாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: