×

டவ்தே புயல் எதிரொலி: குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளம் வீடு இடிந்து குழந்தை உட்பட 2 பேர் பலி: தனுஷ்கோடி, பாம்பனில் கடல் உள்வாங்கியதால் அதிர்ச்சி

சென்னை: டவ்தே புயல் எதிரொலியாக கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் கடல் உள்வாங்கியது. வீடு இடிந்து குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர். அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக தமிழகத்தில் குமரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நேற்று ‘‘ரெட் அலர்ட்’’ விடுக்கப்பட்டு இருந்தது.   குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதன்காரணமாக நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.01 அடியாக இருந்தது. அணைக்கு 1532 கன அடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, முக்கடல் என அனைத்து அணைகளிலும் சேர்த்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

2 பேர் பலி: நேற்று முன்தினம் நள்ளிரவு ராமன்துறை கடற்கரை கிராமங்களில் சூறாவளி காற்று வீசியது. இதில் அங்கு பெட்மின் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து அவரது 2 வயது குழந்தை ரெஜினாள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது. மேலும் மூன்று பேரின் வீடுகளும் பலத்த சேதமடைந்தது. அருமனை அருகே சாரோடு பகுதியைச் சேர்ந்த டைட்டஸ் மகன் யூஜின் (36). இவர் கேரள மாநிலம் செறுவாரக்கோணம் பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது காற்றுடன் பெய்த மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து யூஜின் பலியானார். வாழை தோட்டங்கள் பாதிப்பு: பலத்த சூறைக்காற்றுடன் பெய்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி, குழித்துறை அருகே இரவிபுதூர், பைங்குளம், தக்கலை அருகே முளகுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை, குளச்சல் அருகே சரல் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இப்பகுதிகளில் வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

கடல் உள்வாங்கியது: இப்புயலினால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று காலை முதல் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கரையோர பகுதியிலும் நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. புயலினால் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பன் வடக்கு கடல் பகுதியில் கடல் நீண்ட தூரத்திற்கு உள்வாங்கியதால் கடல்நீர் வற்றிய நிலையில் ஏராளமான நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றன. மேலும் ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பலத்த காற்று வீசிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்ய துவங்கிய மழை நேற்றும் பெய்தது. இரவு வீசிய சூறைக்காற்று காரணமாக பல வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அங்கிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கொடைக்கானல் ஏரியின் மதகுகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் கரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரங்கள் விழுந்தன: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகம் - கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைச்சாலையில், 3வது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் 2 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதேபோல் குரங்கணி மலைச்சாலையில் பழமையான மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர், சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர். ஊட்டிக்கு மீட்புக்குழு: மழை பாதிப்புக்களை உடனுக்குடன் சீரமைக்க மற்றும் மீட்பு பணிகளை மேற்ெகாள்ள கோவையில் இருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு ஊட்டி வந்துள்ளது.தற்காலிக பாலம் உடைந்தது: நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் விடிய, விடிய மழை கொட்டியது.

களக்காட்டில் 246.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. களக்காடு- தலையணை சாலையில் ஐந்துகிராமத்தில் நாங்குநேரியான் கால்வாய் குறுக்கே புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை இன்னும் அமைக்கப்படவில்லை. இதையொட்டி கால்வாயில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். இதனிடையே கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் நேற்று அதிகாலை தற்காலிக பாலம் உடைந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடைபட்டது.

Tags : Dowry ,Kumari district ,Dhanushkodi ,Pamban , Echo of Dowry storm: Two killed in floods in Kumari district
× RELATED கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம்