×

தொடர் விலையேற்றத்தால் மக்கள் பாதிப்பு: 15 நாளில் பெட்ரோல் 1.66 டீசல் 2.06 உயர்வு

சேலம்: நாடு முழுவதும் கடந்த 15 நாளில் பெட்ரோல் விலை 1.66ம், டீசல் விலை 2.06ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவிய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்து ஒரு பீப்பாய் 25 டாலருக்கு கீழ் வந்தது. அப்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை உயர்த்தின. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின் கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியதும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தத் தொடங்கினர். இதனால், லிட்டருக்கு 10க்கு மேல் உயர்ந்துவிட்டது. அதிலும், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ எட்டியது.

இதன்பிறகு 5 மாநில தேர்தல் வந்ததால், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சற்று குறைத்தது. தேர்தல் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். அதிலும், நடப்பு மாதம் (மே) 4ம் தேதியில் இருந்து நேற்று வரை 8 நாட்கள் விலையேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்படி 15 நாளில், பெட்ரோல் லிட்டருக்கு 1.66ம், டீசல் லிட்டருக்கு 2.06ம் உயர்ந்துள்ளது. கடந்த 1ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43க்கும், டீசல் 85.75க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விலையேற்றத்திற்கு பின் சென்னையில் நேற்றைய தினம் பெட்ரோல் 94.01க்கும், டீசல் 87.81க்கும் விற்பனையானது. ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் இவ்வேளையில், பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : People affected by continuous price hike: Petrol 1.66 diesel 2.06 hike in 15 days
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...