2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்சுகள் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் பேட்டி

கோவை: தமிழகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்சுகள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனை, கொடிசியா கொரோனா சிகிச்சை மையம், தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் நேற்று ஆய்வு செய்தார். இதன்பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: ஆக்சிஜனை வீணடிக்காமல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளோம். இதை நடைமுறைப்படுத்துவதில் இஎஸ்ஐ மருத்துவமனை முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது, ‘‘புரோன் பொசிஷன்’’ என்ற புதிய திட்டத்தை இங்கு அறிமுகம் செய்துள்ளனர். அதன்படி, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, 89, 90 சதவீதம் இருக்கும் கொரோனா நோயாளிகளை குப்புற படுக்கவைத்தால் ஆக்சிஜன் அளவு 94, 95 சதவீதமாக உயரும் என கண்டறிந்துள்ளனர்.

இது குறித்த விழிப்புணர்வை தனியார் மருத்துவமனைகளுக்கும் ஏற்படுத்த உள்ளோம். இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் பிளான்ட், சப்ளையர் தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்சுகள், 2 ஆயிரம் மருந்தாளுனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கோவை அரசு மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள், நர்சுகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, விரைவில் அந்த பணியிடம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் கலாச்சாரம் மாறியாச்சு

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அப்போதைய அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் தலைமையில் எத்தனையோ ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இல்லை.  தற்போது திமுக ஆட்சியில் அமைச்சரின் ஆய்வு கூட்டங்களுக்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதுடன், அவர்களது கருத்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட 9 பேரும், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றனர். திமுக ஆட்சியில் மாறிய இந்த கலாசாரத்துக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: