பாசத்தை விட பயம் அதிகம்: கொரோனா பாதித்த தாயை வீட்டில் அனுமதிக்க மறுத்த மகள்: வெளியில் அமர வைத்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டி அருகே கொரோனா பாதித்த தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகள் மற்றும் மருமகனால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியை சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். மகன்கள், மகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் தாய் அதே பகுதியில் உள்ள மகள் வீட்டில் வசித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த தாயை கொரோனா தொற்று இருப்பதால் மகள் மற்றும் மருமகன் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டின் நுழைவாயில் முன்பு அமர்ந்து காத்திருந்தார். அக்கம் பக்கத்தினர் யாரும் அருகில் செல்ல பயப்பட்டனர்.

தகவல் அறிந்து வந்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு உணவு வழங்கி அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவரது மகள் மற்றும் மருமகன் பிடிவாதமாக வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். பு.புளியம்பட்டி போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இரவு மட்டும் தங்க அனுமதிக்குமாறும், காலை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக உறுதியளித்ததை அடுத்து வீட்டின் காம்பவுண்டுக்குள் அப்பெண்ணை தங்க வைத்தனர்.  இதையடுத்து நேற்று ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அருகே தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தாயை பெற்ற மகளே வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியே அமர வைத்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: