கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

* ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினாலும் குண்டாஸில் நடவடிக்கை

* ரெம்டெசிவிர் விற்பனை மையம் சென்னை, மதுரை, சேலம், திருச்சி உள்பட 5 இடங்களில் துவங்கப்பட்டுள்ளது.

* மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் என பல்வேறு பகுதிகள் மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 243 ரெம்டெசிவிர் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றதாக சென்னை தனிப்படை போலீசார் 24 பேரை கைது செய்தனர்.

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக ஒரு நாளைக்கு 30,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையிலும், வீட்டு தனிமையிலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் சங்கலியை உடைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரு உயிரும் போகக்கூடாது என்பதற்காக தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளை அளவு உயர்த்தப்பட்டது. மேலும், ஒடிசாவின் ரூர்கேலாவில் இருந்து ரயிலில் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

நோய் தாக்கம் அதிகம் உள்ள நோயாளிகளை காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை அதிகளவு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய அரசு ரெம்டெசிவிர் மருந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு அதிகளவில் குவிந்தனர். அதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட முக்கிய நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை துவக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி திறந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவையை கருத்தில் கொண்டு சிலர் கள்ளச் சந்தையில் அதை அதிக லாபத்துக்கு விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலையில் இருந்து ரெம்படெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக கொண்டு வந்த மருத்துவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் இறந்தவரின் பெயரில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்றதாக கார் டிரைவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வங்கதேசத்தில் இருந்து கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் வாங்கிவந்தவர்களை கைது செய்து, நூற்றுக்கும்  மேற்பட்ட குப்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து காவல் துறையினர் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்றவர்களை கண்காணித்து தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கண்காணிப்பு துரிதபடுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வழங்கப்பட்ட உத்தரவின்பேரில், தனிப்படையினர் தேடுதலில் 24 பேர் கைது செய்தனர். அதன்படி மயிலாப்பூரில் 2 வழக்குகளும், கீழ்ப்பாக்கம் பகுதியில் 3 வழக்குகளும், திருவல்லிக்கேணி மாவட்டத்தில் 1 வழக்கும், அடையாறு காவல் மாவட்டத்தில் 1 வழக்கும், புனித தோமையர்மலை மாவட்டத்தில் 3 வழக்குகளும், மாதவரம் காவல் மாவட்டத்தில் 1 வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட 24 நபர்களிடமிருந்து 243 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா 2வது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.

எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதார த்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதேநேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோல, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.  தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர்மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: